சங்கரன்கோவில் அருகே நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சக்தி ஈஸ்வரன் (வயது35) என்பவர் தனது மனைவி ராமலட்சுமி ஊரான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட கொக்கு குளம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
ஈஸ்வரன் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி அங்குள்ள திருவிழாக்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகாசியில் இருந்து மூலப்பொருட்களை வாங்கி கொக்கு குளத்தில் உள்ள அவரது வீட்டில் பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் ஈஸ்வரன் சொந்த வீட்டிலேயே உடல் சிதறி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ராமலட்சுமி சிறு காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கழுகுமலை மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலும் விபத்து ஏற்படாத வண்ணம் தண்ணீரை பீய்ச்சி அடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கரன் கோவில் காவல் துணைக்கண்காணிப்பாளர் சுதீர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நேரில் வந்து பார்வையிட்டார்.