அம்பாசமுத்திரம் அருகே ஆற்றங்கரையில் இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்பு

ஊர்க்காடு பகுதி தாமிரபரணி கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பெண் சிறுத்தை சடலத்தை மீட்டு வனத்துறையினர் விசாரணை.

Update: 2021-11-29 12:30 GMT

தாமிரபரணி ஆற்றங்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பெண் சிறுத்தை உடல்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு பகுதி தாமிரபரணி கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பெண் சிறுத்தை சடலத்தை மீட்டு வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இன்று காலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு சுடுகாட்டுப் பகுதியில் தாமிரவருணி கரையில் இறந்த நிலையில் சிறுத்தை சடலம் ஒன்று ஒதுங்கியது. இதைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் செண்பகப்ரியா உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் வனச்சரக ஊழியர்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சுமார் 5 வயது பெண் சிறுத்தை சடலத்தை மீட்டனர்.

மேலும் சிறுத்தையின் சடலம் தேசிய புலிகள் காப்பக ஆணைய வழிகாட்டுதலின்படி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிங்கம்பட்டி பீட் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது. தொடர்ந்து வனப்பகுதியில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா அல்லது மிருகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயம்பட்டு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட கடையம் வனச்சரகம் கடவக்காடு வனப்பகுதியில் செப்டம்பர் மாதத்தில் ஒரு சிறுத்தை உடல் தலை மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது.

கடந்த 24ஆம் தேதி முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட கன்னிகட்டி வனப்பகுதியில் இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. காப்புக்காடு பகுதியான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் கடந்த சில காலமாக இது போன்ற மர்மமான நிகழ்வுகள் நடைபெற்று வருவது இயற்கை மற்றும் வன ஆர்வலர்களிடையே காப்புக் காட்டின் பாதுகாப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News