பெருமழை வெள்ளம்: மானாவாரி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் உளுந்து,மக்காச்சோளம், பாசி பயிறு வகைகள் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 17, 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளம் மற்றும் உளுந்து ஆகிய பயிர்கள் சேதம் அடைந்தது.
மழைப்பொழிவு முற்றிலும் நின்ற போதும் வயல்வெளிகளில் இருந்து தண்ணீர் முழுமையாக வடியவில்லை. இதனால் பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வரை செலவு செய்து தற்போது அறுவடை செய்யக்கூடிய பருவத்தில் மழையால் அனைத்தும் வீணாகி விட்டதாகவும், எனவே அரசு ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேரிடர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்,நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்,சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.