கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி ஆசிரியைகள்
அரசின் ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தலில் மேம்படுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியையும் அவரது உதவி ஆசிரியையும்.
தென்காசி மாவட்டத்தின் கரிவலம்வந்தநல்லூர் பேரூரில் 1953ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. அப்போதைய காலங்களில் 2017 வரை அந்த ஆரம்பப் பள்ளியில் குறைந்து அளவு மாணவ மாணவியரே பயின்று வந்தனர். கடைசியாக 16 மாணவ மாணவிகள் என்று வருகை சுருங்கிப்போனது. ஆனால் இந்தக் குறைபாட்டை அரசோ ஆசிரியர்களோ கண்டு கொள்ளவில்லை ஏன் இப்படி என்று சிந்திக்கவும் இல்லை.
இப்படிப்பட்ட சூழலில் தான் இந்தப் பள்ளிக்கு 2017ல் பணி மாறுதலாகி வந்திருக்கிறார் தலைமை ஆசிரியையான பரமேஸ்வரி. பிள்ளைகளின் வருகையைக் கண்டும் பள்ளியின் சுற்றுச் சூழலும் அவரைப் பதறவைத்திருக்கிறது. காரணம் சுற்றுப்புறச்சூழல் கெட்டுப்போய், இருந்த இரண்டு அறைகளும் புறக்கணிக்கப்பட்ட பழைய குடோன் போன்று காட்சியளித்ததுதான்.
தனது பொறுப்பை உணர்ந்த தலைமை ஆசிரியை இந்தக் நிலையை மாற்றி பள்ளியை ரம்மியமான சூழலுக்கு கொண்டு வந்தால் தான் பிள்ளைகள் கல்வி கற்கும் படியான சூழல் அமையும் என்று உணர்ந்து, முதற்கட்டமாக பள்ளியை செம்மைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது 16 குழந்தைகளின் எண்ணிக்கை 10 ஆக சுருங்கியது இருக்கும் குழந்தைகளை நல்லபடியாக கவனித்து கற்றலை மேம்படுத்தினால் மற்ற குழந்தைகளின் வருகை தானாகவே அதிகரிக்கும் என்ற திட்டத்தில் முதலில் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். தலைமை ஆசிரியையின் இத்திட்டத்திற்கு உதவி ஆசிரியை அருணாசல வடிவும் துணைநின்றார். தோள்கொடுத்தார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக பள்ளிக்கு வருகிற 10 குழந்தைகளையும் வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தபோது விஷயமறிந்த தலைமை ஆசிரியை, வேண்டாம். எனக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள் உங்கள் பிள்ளைகளின் கற்றலை மேம்படுத்திக் காட்டுகிறேன் என்று ஆணித்தரமாக சொல்ல, அதனை ஏற்று பெற்றோர்கள் திரும்பினர்.
தற்போதைய மாணவர் வருகை அதிகரிப்பு மற்றும் பள்ளி சூழல்கள் எப்படி சாத்தியமானது என்று தலைமையாசிரியை பரமேஸ்வரி கூறுகையில், இதை பாரமாக நினைக்காமல் நம் கடமை என்று திடமாகவும் வைராக்கியத்துடனும் செயல்பட்டோம். வகுப்பறை சூழல் இருப்பிடம் ரம்மியமாக இருந்தால்தான் மாணவர்களின் ஈர்ப்பு, கற்றல் ஆர்வம் பிறக்கும் என்பதால், அந்த மோசமான சூழலை மாற்ற ஆரம்பப்பள்ளிகளின் சர்வ சிக்ஷா அபிஞான் திட்டத்தில் பராமரிப்பு பணிக்கான நிதி கேட்டதில் பத்தாயிரம் மட்டுமே தந்தார்கள்
அந்த பணம் போதாது என்பதால் என்னுடைய கைப்பணம் 15 ஆயிரம் போட்டு பள்ளியின் சுவர் வகுப்பறைகளை சுத்தப்படுத்தி சுற்றுச்சுவர்களை வர்ணம் பூசியும் வயரிங் செய்து பள்ளியைப் பளபளப்பாக்கியதும் மாணவக் குழந்தைகளுக்கு குஷி. வகுப்பறையின் பெஞ்ச்களை ரிப்புர் செய்து சீரமைத்ததால் மாணவர்கள் ஆர்வமாகப் பள்ளிக்கு வந்தார்கள்.
அடுத்து நேராக கற்பித்தலுக்குப் போகாமல் மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கம். கட்டுப்பாடு பெரியவர்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்வது என்று அவர்களின் மனதில் பதியும்படி போதித்தேன்.
பெற்றோர்களை மரியாதையாகப் பேசவேண்டும். வீட்டுக்கு வருகிற பெரியவர்களை வணக்கம் சொல்லி வாங்க என்று சேர்போட்டு உட்கார வைக்க வேண்டும். அப்பாம்மா யிப்ப வந்துறுவாங்கன்னு நின்று கொண்டே அமைதியா பேசவேண்டும் என்ன வேணும்னு உபசரிக்கணும் என்று ஒழுக்கம், பழகும் தன்மையை ஆரம்பத்தில் போதித்தேன்
அதன்படி மாணவர்கள் நடந்து கொள்ள தங்கள் பிள்ளைகளின் பேச்சில் பழக்கவழக்கத்தின் மாற்றம் ஒழுக்கம் கண்டு பெற்றோர்கள் பரவசப்பட்டனர். காலையில் நேரத்திற்கு தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆர்வத்தில் குழந்தைகளை தலைவாரி, சீருடையுடன் “நீட்“டாக அனுப்பினர். அதேபோன்று பள்ளிக்கு வரும் பிள்ளைகளும் முறையாக ஒருவர் பின் ஒருவர் வரிசையாக வருமளவுக்கு அவர்களை மாற்றியது நல்ல பலனைக் கொடுத்தது. ஊரிலும் எங்கள் பள்ளியின் கற்பித்தல், பிள்ளைகளின் கட்டுப்பாடு போன்றவைகளும் நல்ல மதிப்பைப் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த நாங்கள் கற்பித்தலை முறைப்படுத்தினோம் நேராகப் பாடங்களை வாசிக்காமல் அவர்கள் புரிகிற வகையில் எழுத்துக்களை உருவகப்படுத்தினோம். உதாரணமாக அரபிக் கடல் என்று சொன்னால் பிள்ளைகளுக்குப் புரியாது. அதனால “அ“னாவிலிருந்து பிற எழுத்துக்களை உருவகப் படுத்திக்காட்டும் போது அவர்கள் சுலபமாக அரபிக்கடல் என்றும் மற்றவைகளையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார்கள்.
இந்த வழிகளில்தான் எழுத்துக்களை கற்றுக் கொடுத்தேன் சுலபாக வாசிக்கக் கற்றுக் கொண்டார்கள். அடுத்து ஆசிரியர்களை மாணவர்கள் டீச்சர், சார், என்று அழைத்தால் ஒருவிதமான அன்னியத் தன்மையாகிவிடும். அதனால மாணவர்கள் ஆசிரியரிடையே கூச்சமில்ல நெருக்கம் வேண்டும் என்பதற்காக, மாணவிகளிடம், நீங்கள் என்னை டீச்சர், எச்.எம். என்று கூப்பிட வேண்டாம். உங்கள் வீட்டில் பெற்றோர்களை பாட்டியை எப்படி அழைப்பீர்களோ அப்படி அழைத்தால் போதும் என்றேன். அவர்களின் பயம் கூச்சத்தைப் போக்கினேன். அவர்களும் என்னை அம்மா என்றழைத்தனர். ஒரு சில பிள்ளைகள் பாட்டி என்றழைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மாணவிகள் என்னிடம் பயமின்றி சகஜமாகவே பழகினார்கள்.
அடுத்து, செய்யுள், திருக்குறள் போன்றவைகளை நேரடியாக வாசிக்கக் கற்றுத்தராமல் அதனைப் பாடலாகப் பாடிப் போதித்தேன். உதாரணமாக அகரமுதல எழுத்தெல்லாம் உள்ளிட்ட திருக்குறள் மற்றும் செய்யுள்களை மாணவிகளின் ரசனைக்கேற்ப மெட் அமைத்து பாடலாகப் பாடி கற்றுத்தந்தது பலன் கிடைத்தது. அதன் மூலம் அவர்களாகவே ஆர்வத்துடன் அவர்களின் தன்மைக்கேற்ப பாடிக் கற்றதால் செய்யுள் திருக்குறளை மனப்பாடம் செய்து கொண்டார்கள்.
பிற்காலத்தில் அவர்கள் சுயதொழிலில் ஈடுபடும் வகையில், நாங்களே பல வடிவங்களில் பறவைகள், பொம்மைகள், பூக்கள் போன்ற பொருட்களைத் தயாரிக்கக் கற்றுக்கொடுத்தபோது ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தனர். காலப் போக்கில் தொடர்ந்து நான் மாணவ, மாணவிகளைக் கல்வியில், தொழிற்கல்வியில் முன்னேற்றியதற்கு பலன்கிடைத்தது.
மேலும் அவர்களின் உடல்நலன் ஆரோக்கியம் முக்கியம் அக்கறை வேணும் என்பதையும், உடல் கட்டமைப்பை நல்லபடியாக வைத்துக் கொண்டால் நோய் அண்டாது என்பதை எடுத்துச்சொல்லி தினமும் அவர்களுக்கு விளையாட்டு, யோகா போன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறேன். அவர்களும் ஆர்வத்துடன் அதனை செய்துவருகின்றனர்.
எங்கள் பள்ளியின் பிள்ளைகளின் வளர்ச்சி கேள்விப்பட்டு ஊரிலுள்ள முக்கியமான தன்னார்வலர்கள் பெஞ்ச் மற்றும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொடுத்தார்கள். அதன் மூலம் சுத்தமான குடிநீரை பிள்ளைகளுக்கு வழங்கி வருகிறோம். ஒரு சிலர் ஏற்பாட்டில் கிடைத்த இரண்டு நவீன தொலைக்காட்சி மூலம் மாணவிகளுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சியும் வழங்குவதால் கற்றலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
எங்களின் ஆறு வருட உழைப்பிற்கு கிடைத்த பலன், எங்கள் பள்ளிப் பிள்ளைகளின் கற்றலில் ஒழுக்கத்தில், தரத்தில், கட்டுப்பாட்டில் முன்னேற்றமும் வளர்ச்சியும் அடைந்ததில் எங்கள் உதவி ஆசிரியை அருணாச்சல வடிவுவின் பங்கும் முக்கியம். 10 பேர் படித்த எங்கள் அரசு தொடக்கப்பள்ளியில் இப்போது 46 குழந்தைகள் என வளர்ந்துள்ளது என சாதித்த பெருமையில் சொல்கிறார். தலைமை ஆசிரியை பரமேஸ்வரி
இன்னோவேட்டிவ் டீச்சர்ஸ் அவார்டு பெற்றவர். அவர், தான், பணிக்குச் சென்ற பள்ளிகளின் குழந்தைகளின் கல்வித் தரத்தையெல்லாம் இப்படி உயர்த்தியவர்.
கரிவலம் வந்தநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி தற்போது ஜொலிக்கிறது. இது கல்வி வளம் தந்த நல்லூராக உருவாக காரணமாக இருந்த தலைமையாசிரியை பரமேஸ்வரி அவர்களையும் உதவி ஆசிரியை அருணாசல வடிவு அவர்களையும் மனதார பாராட்டுகிறோம்.