தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்: தற்கொலை முயற்சி, சங்கரன் கோவிலில் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறு காரணமாக மகன் தந்தையை அரிவாளால் வெட்டினார், பின்னர் தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-06-27 02:30 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே சொத்து தகராறு காரணமாக தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி பகுதியைச் சேர்ந்தவர் தர்மர். அவரது மகன் இசக்கிமுத்து, இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக தர்மருக்கும் இசக்கி முத்துவுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தந்தை மகன் இருவருக்கும் சொத்து சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து அரிவாளால் தனது தந்தையை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தர்மர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைகாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதே வேளையில் இசக்கிமுத்துவும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இசக்கி முத்துவும்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சேர்ந்தமரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News