சங்கரன்கோவில் அருகே தைப்பொங்கலையொட்டி சிறுமிக்கு விளக்கிடு கல்யாண விழா
சங்கரன்கோவில் அருகே தைப்பொங்கலை முன்னிட்டு சிறுமிக்கு விளக்கிடு கல்யாணபாரம்பரிய சடங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் 9 வயது சிறுமிக்கு விளக்கிடு கல்யாண விழா நடைபெற்றது. விளக்கிடு என்பது கார்காத்தார் சமூகத்திற்கு உரிய ஒரு காப்பு சடங்காகும். தைப்பொங்கல் அன்று வருடந்தோறும் நடைபெறக்கூடிய ஒரு பாரம்பரிய சடங்கு ஆகும்.
இதில் பெண் குழந்தைக்கு ஐந்து, ஏழு அல்லது ஒன்பது வயது நடக்கும் பொழுது நிகழ்த்தப்படும் ஒரு காப்பு சடங்கு ஆகும். இச்சடங்கில் பெண் குழந்தைக்கு தங்க சரட்டில் நவ சக்தி நாயகியின் அம்சமாக 9 தங்கமணிகள், சிவனின் அம்சமாக 10 பவளங்கள் சேர்ந்து கோர்த்துள்ள நவதாலி என்றழைக்கப்படும் அணிகலனை அணிவித்து விளக்குகளில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்து ஆசீர்வதிக்கும் ஒரு விழா ஆகும்.
விளக்கிடு கல்யாணம் நிகழ்ச்சியில் சிறுமிக்கு அவருடைய தாத்தா நவதாலி அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு சிறுமியை மலர்கள் தூவி வாழ்த்தினர்.
தற்போது வளர்ந்து வரும் அறிவியல் உலகத்தில் நம்முடைய பாரம்பரிய சடங்குகளை தற்போதைய குழந்தைகளுக்கு சொல்லித் தரும் நிகழ்ச்சியாக விளக்கிடு கல்யாணம் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.
மேலும் முதியவர்களை அனைவரும் மதித்து நடக்க வேண்டும், முதியோர் இல்லங்களை தவிர்ப்பதற்கு அனைவருக்கும் சொல்லித்தரும் பாடமாக விளக்கிடும் கல்யாண நிகழ்ச்சி இருப்பதாக அவரது உறவினர்கள் கூறினர்.