திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி - எடப்பாடி பழனிச்சாமி
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி அதிமுக அரசின் நலத்திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.;
சங்கரன்கோவிலில் அதிமுகவின் 52 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திமுக குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார். திமுக கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி எனவும் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை திமுக ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதாகவும் தெரிவித்த அவர், திமுக ஒரு குடும்ப கட்சி எனவும் சாடினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுரண்டை சாலையில் அதிமுக 52 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்திருந்தார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் கோவிலில் உள்ள கோமதி யானைக்கு பழ வகைகள் கொடுத்து ஆசி பெற்றார். இதனையடுத்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பொதுக்கூட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன், முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி, கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுகவினர் அடிக்கல் நாட்டுகிறார்கள் எனவும், ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்கள் எனவும் பேசியுள்ளார்.
இப்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் ஏமாந்து போய் உள்ளனர். தமிழக முதல்வர் எங்களைப் பார்த்து பிஜேபினுடைய பி டீம் என்று கூறுகிறார். முதலில் இந்தியா கூட்டணியில் யார் யார் பிரதமர் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
திமுக ஒரு குடும்ப கட்சி எனவும் திமுக கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.