ஊத்துமலை அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஊத்துமலை அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.;
ஊத்துமலை அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவீர சின்னு மகன் வீரமல்லையா(19). மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு பிரிவில் படித்து வருகிறார். இவருடைய பேராசிரியர்கள் இவர் மற்றும் சக மாணவர்களுக்கு வரலாறு குறித்து பாடம் கற்பித்து கொண்டிருக்கும் போது கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்புகளை பயிற்றுவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற கல்வெட்டுக்கள் தமிழகத்தில் ஏராளமான பகுதிகளில் காணப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
இதுக்குறித்து தனது சொந்த ஊரான நொச்சிகுளத்தில் சிறிய ஆய்வு மேற்கொண்ட வீர மல்லையா தனது தாத்தா அப்பையா என்பவரது வயல்வெளியில் அமைந்துள்ள வேப்ப மரத்தின் கீழ் கல்வெட்டு போன்ற கல்லை தெய்வமாக பாவித்து வழிபட்டு வந்ததை கண்டார். இதுக்குறித்து தனது கல்லூரி பேராசியர்களான லேப்டினட் முனைவர். ராஜாகோபால் மற்றும் முனைவர் பிறையா ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட அவர்கள் கல்லூரி தலைவர் ராஜகோபால் ஆலோசனையின் படி செயலாளர் விஜயராகவன் அறிவுறுத்தலின்படி உடனே நொச்சிகுளம் கிராமத்திற்கு சென்று கல்லை பார்வையிட்டதில் அந்த கல் பழங்காலத்து கல்வெட்டு என்பது தெரியவந்தது. தெய்வமாக வழிபட்டு வந்ததால் அந்த கல்வெட்டில் சுற்றியிருந்த துணியை அகற்றி அதில் எழுதியிருக்கும் எழுத்துக்களை ஆய்வு செய்தனர்.
சுமார் நான்கு அடி உயரத்தில் கோணிக்கல் வடிவத்தில் அமைந்துள்ள அந்த கல்வெட்டை ஆய்வுசெய்த பேராசிரியர்கள் சுமார் 19 வரிகள் உள்ளதாகவும் இந்த கல்வெட்டு 1268 முதல் 1312 வரை ஆட்சி செய்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிகாலத்தில் செதுக்கப்பட்ட தானக் கல்வெட்டு எனவும் இந்த கல்வெட்டு 1294-ஆம் ஆண்டு செதுக்கப்பட்டது எனவும் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற கல்வெட்டுக்கள் தமிழகத்தில் ஏராளமானவை காணப்படுகிறது எனவும் அதனை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கண்டறிந்து அரசுக்கு தெரிவித்து வரலாற்றை மீட்டெடுக்க துணை நிற்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் ராஜாகோபால் மற்றும் பிறையா தெரிவித்தனர். ஆய்வு ஏற்பாடுகளை ஊத்துமலை தனிப்பிரிவு காவலர் சொரிமுத்து செய்திருந்தார்.