சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் அருகே நாட்டு வெடிகுண்டு?

சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் அருகே நாட்டு வெடிகுண்டு போல் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-03-10 13:07 GMT

சங்கரன்கோவிலில் நாட்டு வெடிகுண்டு போன்று கிடந்த பேன்சி ரக பட்டாசு.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சன்னதி தெருவில் நாட்டு வெடிகுண்டை போலவே கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. பேன்சி ரக பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் பாகம் என்று உறுதியான பின்னரே மக்கள்  நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலின் முன்பு நாட்டு வெடிகுண்டை போலவே உருவம் உள்ள மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள்  காவல்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். உடனடியாக கோவில் முன்பு உள்ள சன்னதி தெருவிற்கு வந்த காவல்துறையினர் அதனை தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் போட்டு வைத்தனர்.

அந்த பொருள் மீது போலீசாருக்கு ஆரம்பம் முதலே சந்தேகமாக இருந்ததால் இதுபற்றி பட்டாசு தொழிற்சாலை தொழில்நுட்பவியலாளர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த  நிபுணர்களை அழைத்து வந்து அதனை காண்பித்து விளக்கம் கேட்டனர். அப்போது இது பேன்சி ரக பட்டாசு பாகம் என அவர்கள் அதனை உறுதிப்படுத்தினர். இன்று சுபமுகூர்த்த தினம்என்பதால் கோவிலில் நடைபெறும் திருமணநிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மணமக்களும் குழுவினராக கோவிலுக்கு வந்து சென்றனர்.

அப்போது அங்கு ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில் சில வெடிக்காமல் கிடந்தன. அப்படி வெடிக்காமல் கிடந்த பட்டாசுகளில் பைப் பேன்சி ரக பட்டாசு ஒன்றின் பாகம் பார்ப்பதற்கு நாட்டு வெடிகுண்டு போலவே இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பேன்சி ரக பட்டாசின் பாகம் என உறுதிப்படுத்தப்பட்ட பின்பே காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags:    

Similar News