ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை
தென்காசியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;
தற்கொலை செய்து கொண்ட மாரிச்செல்வம்.
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரி ராஜா மகன் மாரிச்செல்வம்(வயது 25). இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் எந்த நேரமும் ஆன்லைன் மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாரிச்செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் இருந்தார்.
மயங்கிய நிலையில் இருந்த மாரிச்செல்வத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் தடை சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. ஆனாலும் தற்கொலைகள் தொடர்வது கேள்விக்குறியை எழுப்பி உள்ளது.