களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு தொடங்கியது
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது.;
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது
தமிழகத்தின் முதலாவது புலிகள் காப்பகமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் விளங்குகிறது. ஆண்டு தோறும் புலிகள், மாமிச உண்ணிகள், இரையினங்கள் கணக்கெடுப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அகில இந்திய புலிகள் கணெக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும். இதுவரை 4 முறை இந்த கணக்கெடுப்பு நடைபெற்றுள்ள நிலையில் தற்போது இந்த ஆண்டு 5 -வது அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. 4 நிலைகளை கொண்ட இந்த கணக்கெடுப்பில் தற்போது முதல் மற்றும் மூன்றாம் நிலைகள் மட்டுமே மேற்கொள்ளபட இருக்கிறது. அம்பை வனச்சரக கோட்டத்தில் மொத்தமுள்ள 29 பீட்டுகளில் குழுவுக்கு 4 முதல் 5 பேர் கொண்ட குழுவாக அமைத்து இந்த கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது.
இதற்கு முன்பு கையால் அளவெடுத்து, காகிதத்தில் பதிவு செய்யும் முறையில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது பிரத்யேக மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதுகுறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு 29 மொபைல் போன்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கணக்கெடுப்பின் முதலாம் நிலையானது இன்று தொடங்கி வருகின்ற பிப்ரவரி 4 வரை களப்பணியாளர்கள் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேட்டை தடுப்பு முகாம்களில் தங்கி 8 நாட்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
மேலும் இந்த கணக்கெடுப்பின் மூன்றாம் நிலைப்படி முக்கிய மற்றும் புலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் மற்றும் பிற மாமிச உண்ணிகள் 25 நாட்கள் கண்காணிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.இதன் மூலம் விலங்குகளின் நடமாட்டம், எச்சம், அடையாளங்கள் என அனைத்தையும் அரிய முடியும், நாள்தோறும் வனப்பகுதியில் நடக்கும் வன உயிரினங்கள், தாவரங்கள் குறித்த தகவல்களை கண்காணிக்க முடியும் என்றார். இதில் வானவர்கள் கார்த்திகேயன், சரவணன்,பாரத் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்