ஓட்டு இயந்திர அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி அதிமுக- பாஜக மறியல்

சங்கரன்கோவில் அருகே, வாக்கு இயந்திரம் அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி அதிமுக, பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-21 01:30 GMT

சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி அதிமுக -  பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி நகராட்சி,  வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும்,  புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு 11 மணி அளவில் காரில் திமுகவினர் நான்கு பேர் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை அதிமுகவினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் இரண்டு பேர் தப்பி ஓடியுள்ளனர். வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு இயந்திரங்கள் மாற்றச் சென்றதாகக்கூறி அதிமுக, பாஜக, அமமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து,  நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags:    

Similar News