கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பதாக கூறி கிராம மக்கள் பேனர் வைத்து, வாசலில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பாட்டத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அக்கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாட்டத்தூர் கிராமம். இங்குள்ள மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவு நீர் வாறுகால் வசதி, மயான எரிகூடம், அபாயகரமான ஊர் கிணற்றில் இரும்பு வலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ராஜலட்சுமியிடமும் மற்றும் சங்கரன்கோவில் நகராட்சியிலும் பல முறை மனு கொடுத்தும், முற்றுகை போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அக்கிராம மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் வீடுகளின் வெளியே கருப்பு கொடி ஏற்றியும், அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சி ஆணையர் மற்றும் சங்கரன்கோவில் நகராட்சி பொறியாளர் அப்துல் காதர் ஆகியோரை கண்டித்து போஸ்டர், பேனர்களும் வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.