செங்கோட்டை அருகே கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்தார் மனைவி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவனை மனைவி கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.;
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் முருகன் (வயது 42) கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நாச்சியார் (வயது 35). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று முருகன் அவரது வீட்டிற்கு இன்னொரு பெண்ணை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கோபமடைந்த முருகனின் மனைவி நாச்சியார் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகன் அழைத்து வந்த பெண்ணுக்கும், நாச்சியாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு முருகன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து அவரது மனைவி நாச்சியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் தகராறு முற்றவே கோபமடைந்த நாச்சியார் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து முருகனின் கண்ணில் தூவிவிட்டு அருகே இருந்த கட்டை எடுத்து முருகனை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரியவே பதட்டத்தில் நாச்சியார் கூச்சலிட்டு உள்ளார்.
உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கவே, சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கோட்டை போலீசார் முருகனை கட்டையால் அடித்துக் கொலை செய்த நாச்சியாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் கோபமடைந்த மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் திருமலாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.