தென்காசி மனுநீதி நாள் முகாமில் ரூ. 5.63 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
தென்காசி மனுநீதி நாள் முகாமில் ரூ. 5.63 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி அருகே கொடிக்குறிச்சி கிராமத்தில் மனுநீதிநாள் முகாமில் ரூ.5.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர், மகளிர் உரிமைத் தொகைக்காக இதுவரை மாவட்டத்தில் மூன்று லட்சத்து 80 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொடிக்குறிச்சி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கோட்டாட்சித் தலைவர் லாவண்யா முன்னிலை வகித்தார்.
இந்த மனு நீதி நாள் முகாமில் தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, முதியோர் உதவி தொகை என பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமை தொகையை தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ள நிலையில் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்காக இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மனுக்கள் சரி பார்த்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மனுநீதி முகாமில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இந் நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மனு நீதி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.