இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-14 02:29 GMT

இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகள்


தென்காசியில், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நஞ்சில்லா உணவு பொருட்களை வழங்கி வரும் விவசாயிகள், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த அரசு உதவிட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ளது வடகரை கிராமம். இந்த கிராமத்தில் நெற் பயிறுக்கு அடுத்தப்படியாக மா, பலா, வாழை போன்ற பல்வேறு காய்கறிகளை விளைவிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து நஞ்சில்லா உணவை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாய பணிகள் செய்து வருகின்றனர். இங்கு வெண்டைக்காய், மிளகாய், கத்தரிக்காய், சுரைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் இயற்கையான முறையில் விளைவித்து சந்தை படுத்துகின்றனர்.

கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து பொதுமக்களை காத்திடவும், ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடவும் இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சில்லா உணவு பொருட்களை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை சந்தைப்படுத்தும் போது ரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கும் காய்கறிகளை போன்று அதே விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.

இயற்கையான உரங்களை பயன்படுத்தி விளைவிக்கும் நல்ல தரமான காய்கறிகளுக்கும் அதே விலைக்கு கொடுப்பது விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை என்று கூறுகின்றனர். எனவே அரசு இயற்கையாக விளைவிக்க கூடிய காய்கறிகளை, அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய உதவிட வேண்டும். மேலும் தற்போது குறைவான விவசாயிகளே இயற்கை விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் அரசு இயற்கை உரம், இடுபொருட்களை வழங்கி இயற்கை விவசாயத்தை மேம்படுத்த அரசு உதவிட வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News