கடையநல்லூர் வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையால் பரபரப்பு
கடையநல்லூர் வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
வாக்குச்சாவடியில் முகவர்களை வெளியே அனுப்பாததால் முற்றுகையிட்ட வேட்பாளர்கள்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 31வது வார்டுக்கு மேலக்கடையநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு வாக்குச்சாவடியில் நேற்று மதியம் வாக்களிக்க வந்த நபர் ஒருவர் பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்தாக கூறப்படுகிறது. அப்போது அந்த நபரை வாக்குச்சாவடி முகவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து மாலையில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், முகவர்களை அதிகாரிகள் கையெழுத்து போடச் சொன்னதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் யாரும் கையெழுத்து போடவில்லை. இதனால் அதிகாரிகள் பூத் முகவர்களை வெளியே அனுப்பாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அதிமுக, தேமுதிக, பாஜக, புதிய தமிழகம், மற்றும் சுயேட்சை வேட்பாளர் என அனைவரும் எங்களது பூத் முகவர்களை வெளியே அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வாக்குச்சாவடி முன்பு திரண்டு முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்த தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி தேர்தல் அலுவலர் கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி.கணேஷ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பூத் முகவர்கள் அனைவரும் வெளியே வந்தனர். இதனையடுத்து வாக்கு பெட்டியை எடுக்க விட மாட்டோம் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றதையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.