தமிழக கேரளா எல்லையில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

தமிழக கேரளா எல்லையில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-10-30 07:31 GMT

தமிழக கேரளா எல்லையில் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சிலம்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் கிறிஸ்தவ வழிபாட்டு ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனை முன்னிட்டு மாவட்ட எல்லைகளில் காவல்துறையால் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனைச் சாவடியில் அதிகமாக வாகனங்கள் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மிகுந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

தற்போது நடைபெற்று வரும் வாகன சோதனையில் புளியரை மற்றும் செங்கோட்டை காவல் நிலையம் ஒன்றிணைந்து மெட்டல் டிடெக்டர் மற்றும் எஃப் ஆர் எஸ் (FRS- Face recognition software) எனப்படும் செயலி மூலம் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளை சோதனை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது இந்த சோதனையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் முறையாக சோதித்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். போலீசார் நடத்திவரும் தொடர் சோதனையால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.

Tags:    

Similar News