செங்கோட்டை ரயிலில் பயணி தவற விட்ட நகைகள் ஒரு மணி நேரத்தில் மீட்பு

செங்கோட்டை ரயிலில் பயணி தவற விட்ட நகைகள் ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-09-15 10:08 GMT

மீட்கப்பட்ட நகைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

திருமண விருந்துக்கு சென்ற புதுப்பெண்  ரயிலில் தவறவிட்ட நகைகளை ஒரு மணி நேரத்திற்குள் ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு கொடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், கடப்பாக்கத்தி பகுதியை சேர்ந்தவர் பூரணி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு வார காலம் ஆகியுள்ள நிலையில், நெல்லையில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்கு சென்றுள்ளார்.

விருந்து முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய அவர், நெல்லையில் இருந்து செங்கோட்டை வரும் ரயிலில் பயணம் செய்து வந்த நிலையில், ரயிலில் இருந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தனது நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை தனது பையில் கழற்றி வைத்து பயணம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ரயிலானது தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் பூரணி அவசரத்தில் தனது உடமைகளை ரயிலில் வைத்துவிட்டு கீழே இறங்கி உள்ளார்.

ரயிலானது கீழப்புலியூர் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், தனது உடமைகளை மறந்து ரயிலில் விட்டு வந்ததை உணர்ந்த பூரணி உடனே அருகாமையில் இருந்த காவலர்களிடம் நடந்ததை தெரிவிக்கவே, அங்கு இருந்த காவலர்கள் உடனே செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து, ரயிலானது செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் பெட்டிகளை அனைத்தும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது, பூரணியின் உடைமைகள் இருந்துள்ளது.

தொடர்ந்து, அதனை சோதனை செய்தபோது அதில் 7 பவுன் தங்க சங்கிலி மற்றும் விலை உயர்ந்த 2 பட்டு புடவைகள் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து, பூரணியை நேரில் அழைத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை 1 மணிநேரத்திற்குள் மீட்டு ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News