பத்திரப்பதிவில் மோசடி: மாவட்ட பதிவாளரிடம் பெண் புகார்
தென்காசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மோசடி நடப்பதாக மாவட்ட பதிவாளரிடம் பெண் ஒருவர் இன்று புகார் அளித்தார்.
தென்காசி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள். இவருக்கும் இவரது சகோதரருக்கும் அட்டை குளம் அருகே அறுபத்தி ஒன்பது சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை வெள்ளையம்மாளின் சகோதரர் மகன்கள் முறைகேடாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளையம்மாள் தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் இருவருக்கும் சரி பங்கு என்று நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் வெள்ளையம்மாளின் அண்ணன் மகன்கள் அரசு உத்தரவை மீறி முறைகேடாக விவசாய நிலத்தை குடியிருப்பு பகுதிகளாக மாற்றி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக கடையநல்லூர் சார்பதிவாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட இடங்களை விற்பனை செய்யாமல் தடுக்கும் நோக்கில் இன்று மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் வெள்ளையம்மாள் புகார் அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.