ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக - கேரளா எல்லையில் போலீசார் சோதனை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக - கேரளா எல்லையில் இருமாநில போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக- கேரள எல்லைப் பகுதியில் இரு மாநில காவல்துறையினர் ஒன்றிணைந்து மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஓணம் பண்டிகையானது வருகின்ற 29-ஆம் தேதி கேரளாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள சூழலில், தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழக பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகையானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக கேரள மக்கள் ஆயத்தமாகி வரும் சூழலில், பண்டிகை காலங்களின் போது ஏதேனும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையிலும், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழாத வகையிலும், மது உள்ளிட்ட போதை பொருட்களின் கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு பகுதியில் தமிழக காவல்துறையும், கேரள மதுவிலக்கு காவல்துறையும் ஒன்றிணைந்து மோப்பநாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து வாகனங்களையும், அதே போல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இரு மாநிலங்களுக்கும் காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.
மேலும், இரண்டு மாநில காவல்துறையினர் ஒன்றிணைந்து நடத்தும் இந்த சோதனையானது வருகின்ற 29-ஆம் தேதி வரை தமிழக-கேரளா எல்லைப் பகுதியான ஆரியங்காவுப் பகுதியில் நடத்தப்படும் எனவும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்ற சோதனைகளை இரு மாநில காவல்துறையும் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் இரு மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.