உயிரைப் பறித்த அதிவேகம்: தென்காசி அருகே இருவர் உயிரிழப்பு
தென்காசி அருகே அதிவேகமாக சென்றதால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு;
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள்.
கோயில் சூலாயுதத்தில் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் இடித்து விபத்து- 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலே உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேலூர் பகுதியை சேர்ந்தவர் நல்லையா. இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர், கடையநல்லூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். ஆகாஷ் நேற்று இரவு தனது நண்பரான மோட்டை பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 21) என்ற நபரை அழைத்துக் கொண்டு, பண்பொழி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவை பார்க்க சென்றுள்ளார்.
கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு, தனது ஊருக்கு திரும்பி கொண்டிருக்கும்போது, செங்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள வளைவு பகுதியில் அதிவேகமாக வந்துள்ளனர். வேகம் காரணமாக ஆகாஷ் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளானது, கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த கோயில் சூலாயுதத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் 50 அடிக்கு மேல் பறந்து சென்ற ஆகாஷ் மற்றும் ஜெகன் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற செங்கோட்டை காவல்துறையினர் ஆகாஷ் மற்றும் ஜெகன் ஆகிய இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், ஆகாஷ் மற்றும் ஜெகன் உயிரிழந்த சம்பவம் தெரிந்து கொண்ட அவரது உறவினர்கள் தற்போது செங்கோட்டை அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனால் அந்த பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பிரேத பரிசோதனையானது நடைபெற்று வருகிறது.