கன மழை பெய்தும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை - விவசாயிகள் கவலை
கன மழை பெய்தும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என தென்காசி பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கன மழை பெய்தும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள கடனா நதி, கருப்பாநதி ராமநதி குண்டாறு ஆகிய அணைகள் முழுமையாக நிரம்பியது. அதில் வரும் உபரி நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 21,222 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதே மாவட்டத்தில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேக்கரை பகுதியில் அமைந்துள்ள அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கம். 132 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 7200 ஏக்கர் பரப்பளவில் நேரடியாகவும், மறைமுகமாகவும், பாசன வசதி பெறுகிறது. மேலும் மேக்கரை,வடகரை, வாவா நகரம்,அச்சன்புதூர், இலத்தூர், என்ன 16 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. தற்போது அணையில் 123 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இப்போது விவசாயிகள் அணையில் போதிய நீர் இல்லாததாலும், தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும் கார் சாகுபடி செய்யவில்லை. இந்நிலையில் இந்த அணையை நம்பி மேட்டுக்கால் பகுதி விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் காலதாமதமாக பிசான சாகுபடியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் பெய்த கனமழையில் அணை முழுவதுமாக நிரம்ப வில்லை. இன்னும் 40 நாட்களுக்கு தண்ணீர் வேண்டும் என்ற சூழ்நிலையில் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அனையின் நீர் பிடிப்பு,பகுதியான தொடக்க நிலையில் உள்ள O பாயிண்ட் பகுதியில் இருந்து தண்ணீரை கேரள மாநிலம் கல்லாற்றிற்கு திருப்பி விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் கடந்தாண்டு இரண்டு முறை நிரம்பிய இந்த அணை தற்போது அதிக அளவில் கனமழை பெய்தும் அணை நிரம்பவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.