கனிம வள கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு..! எங்கே செல்கிறது கனிமவளம்..?
கனிம வள லாரிகளால் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் ஆனது கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் கேரளாவிற்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்வதற்கு அணிவகுத்து நின்றன.
கேரளாவிற்கு செல்லும் கனிமவள லாரிகள் அனைத்தும் செங்கோட்டை அருகே உள்ள புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் எடை மேடை நிலையத்தில் மட்டுமே, எடை போட வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அந்த குறிப்பிட்ட எடை மேடை நிலையத்தில் எடை போடுவதற்காக நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் அந்த சாலையில், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் வாகன கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இரு மாநில வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், தொடர்ந்து இது போன்ற வாகன நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை போலீசார் எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இருந்து தமிழக கனிம வளங்கள் சுரண்டப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவது எதிர்காலத்தில் தமிழகம் பாலைவனமாகும் என்பதற்கான அடையாளங்கள். முல்லை பெரியாறு எல்லைப்பகுதியில் நாம் நுழைந்துவிடக்கூடாது என்பதால் அப்பகுதியில் கார் பார்க்கிங் அமைத்து வருகிறது கேரளா.
எந்த வகையிலும் உஷாராக செயல்பட்டு வரும் கேரளாவுக்கு எதற்கு நமது கனிம வளத்தை கொடுக்கவேண்டும்? கேரளாவை, கேரள மக்களை பாதுகாப்பதற்கு அந்த மாநில அரசியல் நிர்வாகம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது. அவர்களது சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு எப்படி முனைந்து செயல்படுகின்றனர். அபப்டி இருக்கும்போது தமிழகத்தில் இருந்து அவர்களுக்கு கனிம வளத்தை ஏன் நாம் கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நமது அரசியல் தலைவர்கள்தான் இதுகுறித்து சிந்திக்கவேண்டும்.