கனிமவள கடத்தல் கண்காணிப்பு சிறப்பு அதிகாரி தமிழக கேரளா எல்லையில் ஆய்வு

திருச்சியில் பணியாற்றி வந்த கனிம வளத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது;

Update: 2023-04-07 09:00 GMT

தமிழக எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் கனிம வள கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி கனரக வாகனங்களை ஆய்வு செய்தார்

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிமவள கடத்தல்- கண்காணிக்க உதவி இயக்குனர் தலைமையில் சிறப்பு தனிப்படை  அமைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இருந்தபோதும், ஏராளமான லாரிகளில் தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கடந்த இரண்டு தினங்களாக தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கேரளாவிற்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளை மறித்து ஆவணங்களை சரி பார்த்து அனுப்பினர். மேலும், சட்ட விரோதமாக அதிக பாரங்களை ஏற்றி சென்ற லாரிகளைப் பிடித்து அபராதம் வி்தித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தது தொடர்ந்து, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக சிறப்பு தனிப்படையினர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், தென்காசி மாவட்டத்திற்கு திருச்சியில் பணியாற்றி வந்த கனிம வளத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன் தலைமையில், மூன்று பேர் அடங்கிய குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், இன்று கனிமவளத்துறை சிறப்பு தனிப்படையினர் இன்று தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகள் அனைத்தையும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பின்னரை அனுப்பி வைக்கப்பட்டன.  இந்த நடவடிக்கை தொடரும் எனவும் சட்ட விரோதமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கனிமவளத்துறை சிறப்பு தனிப்படை அதிகாரி சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News