கட்டையால் அடித்து கூலித் தொழிலாளி கொலை: நண்பர்கள் இருவர் கைது

தென்காசி அருகே கட்டையால் அடித்து கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-03-22 10:36 GMT

கொலை செய்யப்பட்ட ஐயப்பன்.

தென்காசி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன் (வயது 42). இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள சூழலில், ஐயப்பனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஐயப்பனின் மனைவி தற்போது நாகர்கோயிலில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஐயப்பன் தற்போது கட்டளை குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தாயுடன் வசித்து வரும் சூழலில், ஐயப்பன் வருமானத்திற்காக சென்ட்ரிங் வேலை தற்போது செய்து வருகிறார்.

செண்பகராஜ்

இந்த வேலைக்கு ஐயப்பன் செல்லும்போது உடன் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் செண்பகராஜ் ஆகிய இருவரும் ஐயப்பனுக்கு நண்பராகியுள்ளனர். மூன்று பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று வந்த சூழலில், தினமும் மூவரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கடந்த 18ஆம் தேதி பிரபுவின் வீட்டில் வைத்து ஐயப்பன் மற்றும் செண்பகராஜ், பிரபு ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.அப்போது ஐயப்பன் தான் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, பிரபுவின் மனைவி குளிப்பதை எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட பிரபு உடனே ஐயப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பிரபு

இந்த நிலையில், நேற்று பிரபுவும், செண்பகராஜும் சேர்ந்து ஐயப்பனை மது அருந்த கட்டளை குடியிருப்பு பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்பொழுது, ஐயப்பனுக்கு மது கொடுத்து, செண்பகராஜனும், பிரபுவும் இணைந்து ஐயப்பனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். பின்னர் அவர்கள் இருவரும்  ஐயப்பனை அங்கே போட்டுவிட்டு பிரபுவும், செண்பகராஜும் தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஐயப்பன் இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், புளியரை போலீசார் விரைந்து வந்து ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு மற்றும் செண்பகராஜ் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.இந்த  சூழலில் நேற்று இரவு பிரபுவையும், செண்பகராஜையும் புளியரை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News