நிபா வைரஸ் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
நிபா வைரஸ் எதிரொலியாக தென்காசி மாவட்டம் தமிழக - கேரளா எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது
கேரளாவில் தற்போது வரை நிபா வைரஸ் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இரு மாநில எல்லைகளிலும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நிபா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டதின் தமிழக-கேரள எல்லை பகுதியாக விளங்ககூடிய புளியரை சோதனை சாவடியில் சுகாதார துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
கேரளாவில் இருந்து தமிழகத்தில் நுழையக்கூடிய வாகனங்களை சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் உடல் வெப்ப பரிசோதனையை கண்காணித்து வருகின்றனர்.
இதில் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்த செல்லப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த சோதனையில் 24 மணி நேரமும் சுகாதாரத் துறையினர் மூன்று குழுக்களாக செயல்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.