கடையநல்லூர் வாக்கு சாவடியில் சுயேட்சை வேட்பாளர், திமுகவினரிடையே வாக்குவாதம்
கடையநல்லூர் 4-வார்டிற்கான வாக்குச்சாவடியில் சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்களுக்கும், திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு 39,193 ஆண் வாக்காளர்களும், 39,630 பெண் வாக்காளர்களும், மொத்தம் 78,823 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 82 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு காலை 9 மணி வரை நிலவரப்படி 10.54 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.
இந்நிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 4-வார்டுகளுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திமுக நகர செயலாளர் சேகனா சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த வாக்குச்சாவடி மையத்தில் தற்போது வாக்கு பதிவானது விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு சேகனா மற்றும் திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை சம்பவ இடத்திற்கு வந்ததால் அங்கு மேலும் பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.