செங்கோட்டை பார்டர் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

குற்றாலம் செங்கோட்டை பார்டர் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

Update: 2023-08-03 13:55 GMT

செங்கோட்டை பார்டர் பகுதியில் பிரபல உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

செங்கோட்டை பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கெட்டுப்போன கோழி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தற்போது சீசன் களை கட்டி  வரும் சூழலில், குற்றால சீசனை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக, குற்றாலம் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் ஆனந்த குளியலிட்டு பின்னர் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள உணவகங்களில் உணவருந்துவது வழக்கம்.

இதனால் சீசன் காலகட்டங்களில் குற்றாலத்தில் உள்ள கூட்டத்தைப் போல் பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்களிலும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சில உணவகங்களில் தரமற்ற உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்  அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது சாப்பிட தகுதி இல்லாத பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அழுகிப்போன 42 கிலோ சிக்கன், பிரான், மீன் உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.

மேலும், இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டல் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த நிலையில் குற்றாலம் பகுதியில் சமீப காலமாக ஓட்டல்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News