தமிழக- கேரளா எல்லை புளியரை சோதனை சாவடியில் டாக்டர் கிருஷ்ணசாமி ஆய்வு

தமிழக- கேரளா எல்லை புளியரை சோதனை சாவடியில் டாக்டர் கிருஷ்ணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-09-17 15:02 GMT

புளியரை சோதனை சாவடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார்.

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழக- கேரள எல்லைப் பகுதியில் தமிழக சுகாதாரத் துறைனர் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைவரையும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரை பகுதியில் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறையினர் சார்பில் 6 பேர் கொண்ட குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் நபர்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனுமதித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி புளியரை மற்றும் கோட்டைவாசல் பகுதியில்  நிபா வைரஸ் தொடர்பாக அதிகாரிகள் முறையாக சோதனை நடத்துகிறார்களா? என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் தொற்று குறித்து முறையாக ஆய்வு மேற்கொள்ளவில்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டிய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியின் போது, தற்போது கேரளாவில் நிபா வைரஸ் தொற்றானது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிபா வைரஸ் தொற்றானது தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளது.

ஆனால், புளியரை பகுதியில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழக எல்லைக்குள் நுழையும் பட்சத்தில் வெறும் 6 பணியாளர்களை வைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையும் முழுமையாக இல்லை. கேரளாவில் இருந்து வரும் அனைத்து நபர்களையும் சோதனை செய்யாமல் குறிப்பிட்ட நபர்களை சோதனை செய்வதால் நிபா வைரஸ் தொற்றானது தமிழகத்தில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக சுகாதாரத் துறையினர் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News