தென்காசியில் பிரச்சாரத்தின் போது மோதிக்கொண்ட தி.மு.க. நிர்வாகிகள்

தென்காசியில் வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சாரத்தின் போது மோதிக்கொண்ட தி.மு.க. நிர்வாகிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-04-08 10:17 GMT

திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர்.

திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் இன்று கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, கடையநல்லூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ள அருணாச்சலம் என்பவர் பிரச்சாரம் குறித்து உரிய அறிவிப்பு கட்சி நிர்வாகிகளிடம் கொடுக்காமல் எப்படி பிரச்சாரம் செய்ய வரலாம் எனக் கூறி பிரச்சனையில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து இரு தரப்பினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்றது.

இந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில், திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திமுகவினருடைய கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக சமீப காலமாக திமுக நிர்வாகிகளிடம் ஒற்றுமையின்மை காரணமாக கோஷ்டி பூசலானது தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பொதுமக்கள் மத்தியில் மோதிக்கொண்ட சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் கடையநல்லூர் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போதும் அங்கேயும் இது போன்ற கோஷ்டி பூசலால் நிர்வாகிகள் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News