அவதூறு வழக்கு: இலஞ்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் சம்மன்
இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி செயலாளர், தலைவர் ஆகியோர் அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.
இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி செயலாளர் சண்முக வேலாயுதம் தலைவர் காந்திமதிநாதன் ஆகியோர் அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என செங்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசியை அடுத்த இலஞ்சியில் ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இலஞ்சி கல்வி சங்கம் என்ற அமைப்பின் கீழ் இந்த பள்ளி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்விச் சங்கத்தின் நிர்வாக தலைவராக ராம்கோ குரூப் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற காந்திமதிநாதன் என்பவரும், செயலாளராக ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சண்முக வேலாயுதம் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களின் நிர்வாகத்தின் கீழ் பள்ளியில் பல்வேறு முறைகேடுகளும் சட்டவிதி மீறலும் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இலஞ்சி கல்விச் சங்கம் மற்றும் ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் சட்ட விதி மீறல்கள் மோசடிகள் நடந்து வருகிறது. கல்விச் சங்க செயலாளர் சண்முக வேலாயுதம் மீது போக்சோ சட்டப்படி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு இப்பள்ளியின் முன்னாள் தலைவரும் இலஞ்சி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவருமான பி.கோ. பிச்சையா பிள்ளை என்பவர் தான் காரணம் என சங்கத்தின் செயலாளர் சண்முக வேலாயுதம் மற்றும் காந்திமதி நாதன் ஆகியோர் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டனர்.
இது தொடர்பாக பி.கோ. பிச்சையா பிள்ளை செங்கோட்டை நீதிமன்றத்தில் இருவர் மீதும் கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் எந்தவிதமான அடிப்படை ஆதாரம் இன்றி பத்திரிக்கையில் விளம்பரம் செய்துள்ளனர். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியுடன் தன் மீது அவதூறு பரப்பியதுடன் சமூகத்தில் தனக்கு இருக்கும் நல்ல பெயரை பாழ்படுத்தும் நோக்குடன் செயல்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த இந்த மனுவை செங்கோட்டை நீதிபதி பாலாஜி விசாரித்து, குற்ற வழக்கில் ஆதாரம் இருப்பதை ஏற்று குற்றம் சாட்டப்பட்டவர்களான இலஞ்சி கல்வி சங்க செயலாளர் சண்முகவேலாயுதம், தலைவர் காந்திமதிநாதன் ஆகியோர் வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.