செங்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் நடந்த விபத்தில் கண்டக்டர் உயிரிழப்பு

செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்த விபத்தில் கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-04-08 10:23 GMT

விரைவு பேருந்து பணிமனையில் நின்று கொண்டிருந்த பேருந்தில் பிரேக் பிடிக்காததால் நடத்துனர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் நின்று கொண்டிருந்த விரைவு பேருந்து எடுத்து பணிமனையின் வெளிப்புறமாக விடுவதற்காக லட்சுமணன் என்ற ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார்.

அப்பொழுது, லட்சுமணன் பேருந்தை நியூட்ரல் செய்தவுடன் இறக்கத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தானது நகர்ந்து சென்றுள்ளது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் உடனடியாக பிரேக்கை மிதித்துள்ளார். ஆனால், பேருந்தின் பிரேக்கானது பிடிக்காமல் இறக்கத்தில் நகர்ந்து சென்ற பேருந்து பணிமனையில் உள்ள கணக்காளர் அறை முன்பு நின்று கொண்டிருந்த இரண்டு நடத்துனர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில், ஆறுமுகசாமி என்ற நடத்துனர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், கோமதிநாயகம் என்பவர் தற்போது சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செங்கோட்டை காவல்துறையினர் ஆறுமுகசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, முதற்கட்ட விசாரணையில், நடத்துனரான ஆறுமுகச்சாமியும், கோமதிநாயகமும் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு பேருந்தில் வசூலான டிக்கெட் வசூல் தொகையை கணக்காளரிடம் ஒப்படைப்பதற்காக நின்று கொண்டிருந்ததாகவும், அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்து வந்த பேருந்தானது அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேருந்தை இயக்க சென்ற லட்சுமணனிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News