தமிழக கேரளா எல்லையில் பாஜக சாலை மறியல்
அதிக எடையுடன் கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி செல்வதாக தமிழக கேரள எல்லைப் பகுதி கோட்ட வாசலில் பாஜகவினர் லாரிகளை சிறை பிடித்து சாலை மறியல் ஈடுபட்டனர்
அதிக எடையுடன் கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி செல்வதாக பாஜக கட்சியினர் தமிழக கேரள எல்லைப் பகுதி கோட்ட வாசலில் லாரிகளை சிறை பிடித்து சாலை மறியல் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக நாள்தோறும், காய்கறிகள், சரக்கு வாகனங்கள், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிக அளவில் பயணிக்கின்றன.
மேலும் தமிழகக் கேரள எல்லை என்பதால் இருபுறங்களிலும் அவ்வப்போது லாட்டரி, கஞ்சா, ஹவாலா பணங்கள், கனிம வளங்கள் என பல பொருட்கள் கடத்தப்படுவதுண்டு.
இதனால் இரு மாவட்ட எல்லைகளிலும் பல்வேறு சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை, போக்குவரத்து துறை, வனத்துறை ஆகிய துறைகள் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் அவ்வப்போது கடத்தல் கார்கள் அனைவரின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு பொருட்களை எளிதாக கடத்தி விடுவது உண்டு.
இந்நிலையில் இன்று கேரளாவிற்கு கனிம வளங்களை பல லாரிகளில் ஏற்றி சென்றனர். இதனிடையே தொடர்ந்து கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு செல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை தமிழக எல்லை பகுதியான செங்கோட்டை புளியரை அடுத்த கோட்டைவாசல் பகுதியில் பாஜகவினர் கனிம வளங்களை லாரிகள் அதிக எடையுடன் ஏற்றுச் செல்வதால் ரோடு சேதமடைவதாகவும் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறி கனிம வல லாரிகளை சிறைப்பிடித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழகத்தில் எல்லைப் பகுதியில் தமிழக அரசு சார்பில் எடைகளை கண்காணிக்க தனியாக ஒரு குழுவை நியமனம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை செய்த பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கேரள தமிழக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.