அணையில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான அடவிநயினார் கோவில் அணைப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணி உயிரிழப்பு

Update: 2023-09-21 06:53 GMT

அடவி நயினார் கோவில் நீர் தேக்கத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் மசூது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த செய்யது மசூது (வயது 32) என்ற நபர் தனது நண்பர்களுடன் மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் கோயில் நீர்த்தேக்கத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள வெள்ளை பாறை என்கின்ற பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரின் வேகம் காரணமாக செய்யது மசூது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளார்.

அதிலிருந்து மீள முடியாமல் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி செய்யது மசூது உயிரிழந்தார். இதை கவனித்த அவரது நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரை மீட்க முடியாததால் இது குறித்து செங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின்பேரில் சென்ற செங்கோட்டை தீயணைப்பு துறையினர் போராடி செய்யது மசூது வின் உடலை மீட்ட நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திற்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு அரசியல் பிரமுகரின் அழுத்தத்தின் காரணமாக மேக்கரை அடவிநயினார் நீர் தேக்கத்திற்கு மேல் செல்ல கடந்த வருடம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், இது போன்ற தொடர் விபத்து சம்பவங்கள் அடவிநயினார் கோவில் நீர் தேக்கத்திற்கு மேல் நடப்பதால் மாவட்ட நிர்வாகம் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News