செங்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த காட்டு மாடு உயிருடன் மீட்பு

செங்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த காட்டு மாடு தீயணைப்பு துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2023-12-27 09:52 GMT

செங்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு எருமை மாட்டை வனத்துறையினர் மீட்க முயற்சி செய்தனர்.

கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு மாட்டை மீட்க சென்ற வனத்துறையினரை மாடு தாக்கியதால் உயிருக்கு பயந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஓட்டம் பிடித்தனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வண்டாடும் பொட்டல் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள 5 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு மாடு ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த  தகவலின் அடிப்படையில், கடையநல்லூர் வனத்துறையினர் மற்றும் செங்கோட்டை தீயணைப்புத் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த காட்டு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் காட்டு மாட்டை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஒருங்கிணைந்து கிணற்றிலிருந்து மீட்ட நிலையில் ஆவேசம் அடைந்த காட்டு மாடு வனத்துறையினரை முட்டி காயம் ஏற்படுத்திய நிலையில், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறை காட்டு மாட்டை கண்டு மிரண்டு ஓடினர்.

இந்த நிலையில், வனக்காப்பாளர் ஒருவர் மாட்டிடம் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய நிலையில் மேக்கரை வனவரான அம்பலவாணன் என்பவர் மிகப் பெரிய அளவிலான கம்பு ஒன்றை எடுத்து காட்டு மாட்டை அடித்து விரட்டினார்.

தொடர்ந்து, அங்கிருந்த வன ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஒருங்கிணைந்து காட்டு மாட்டை வனப்பகுதிக்கு விரட்டினர்.  உயிருக்கு போராடிய காட்டு மாட்டை மீட்க சென்ற வனத்துறையினர் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News