திடீர் சுற்றுலா தலமாக மாறியது சூரியகாந்தி பூ தோட்டம்; சுற்றுலா வந்தவர்கள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி

தென்காசியில் பூத்துக்குலுங்கிய சூரியகாந்தி பூ தோட்டத்தில், அப்பகுதி வழியாக சென்ற மக்கள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.;

Update: 2023-07-10 10:50 GMT

அகர கட்டு பகுதியில் சூரியகாந்தி பயிர் செய்த இடம்.

தென்காசி மாவட்டம் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளான, அகர கட்டு, ஆய்க்குடி, சுந்தரபாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் மற்றும் நெல், சோளம், போன்ற பயிர்களை பயிர் செய்வது வழக்கம். தற்போது பெரும்பாலான விவசாயிகள் சோளம் மற்றும் நெல் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில் அகரகட்டு பகுதியை சேர்ந்த கார்வின் என்ற விவசாயி சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிட்டுள்ளார். 90 நாட்கள் பயிரான இந்த சூரியகாந்தி தற்போது அறுவடை செய்ய தயாராகி வருகிறது. இந்த பூக்களின் மீது ஆர்வம் கொண்டு குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குடும்பத்துடன் ‘செல்பி‘ மற்றும் போட்டோ எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.


சூரியகாந்தி பயிர் செய்த விளை நிலத்தில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்த போது எடுத்த படம்.

இந்நிலையில் இங்குள்ள விவசாயிகள் கூறும்போது, நாங்கள் எப்பொழுதும் இப்பகுதியில் சோளம் மற்றும் காய்கறிகளை பயிர் செய்வோம். சுந்தரபாண்டிபுரம், சாம்பவர் வடகரை ஆகிய பகுதிகளில் தான் விவசாயிகள் சூரியகாந்தியை எப்போதும் பயிர் செய்வா். இந்த முறை மாற்றத்திற்காக இப்பகுதியில் நாங்கள் சூரியகாந்தியை பயிர் செய்து உள்ளோம். ஒரு ஏக்கருக்கு இரண்டரை கிலோ விதை தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதை 1200 வரை வாங்கி பயிரிட்டுள்ளோம். தற்போது நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.


ஆனால் அதை விற்பனை செய்ய இங்கு போதிய தரகர்கள் மற்றும் வியாபாரிகள் இல்லை. பெரும்பாலும் விருதுநகர், கோவில்பட்டி, மதுரை ஆகிய பகுதியில்தான் விற்பனை செய்ய வேண்டும். எனவே, அரசு இப்பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் புதிய மாவட்டம் என்பதால், இங்கு சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் ஆலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News