புளியரை அருகே ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
புளியரை அருகே ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புளியரை அருகே கனகரக லாரி - 407 மினிலாரி மோதி மலைச்சரிவில் உருண்டு ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் அதிகப்படியான காய்கறிகள் மற்றும் பால் பூ போன்ற பொருட்கள் தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இங்கு தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கம். குறுகலான மலைப்பாதை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை ரசித்துக் கொண்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் தமிழகத்தில் இருந்து கேரளாவில் இருக்கும் செல்லும்போது பெரும்பாலும் இந்த இயற்கை ரசிக்க இந்த பாதைகளே பயன்படுத்தி கொள்கின்றனர்.
மேலும் அதிகப்படியான கனரக வாகனங்களும் இலகு கனகர வாகனங்களும் செல்வதால் இங்கு அவ்வப்போது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவது உண்டு.
ஐயப்ப சீசன் செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து புனித நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு சபரிமலைக்கு இந்த பாதைகளையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செல்லும்போது இப்பகுதிகளில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதே நேரத்தில் குறுகிய பாதை என்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படும். இதனை சீர் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு எஸ் வளைவு பகுதியில் அகலப்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளது. இதனால் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வந்தன. ஆனால் மலை மீது ஏறும் பாதைகளை விரிவு படுத்தவில்லை.
தென்காசி மாவட்டம் புளியரை அருகே தமிழக கேரளா எல்லையான கோட்டை வாசல் பகுதியில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கனரக லாரி ஒன்று வந்தது. லாரியை கரூரை சேர்ந்த வையாபுரி ஒட்டி வந்தார். இதே போன்று செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு 407 மினிலாரி ஒன்று சென்றது. இதை கட்டளை குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவர் ஒட்டி வந்தார். கோட்டை வாசல் அருகே கனரக லாரியும், 407 மினிலாரியும் நேருக்கு நேர் மோதியதில் மலை சரிவில் இரு வாகனங்களும் உருண்டு விழுந்தது. கீழே இருந்த செங்கோட்டை - கொல்லம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் கனரக லாரி விழுந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்புத்துறை, ரயில்வே துறை, காவல்துறை மற்றும் மீட்பு பணிகள் குழுவினர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர்கள் 2 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்தபோது ரயில் தண்டவாளத்தில் ரயில் வராததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.