தென்காசி அருகே குடியிருப்பு பகுதியில் பிடிபட்டது 14 அடி நீள ராஜநாகம்
தென்காசி அருகே குடியிருப்பு பகுதியில் மரத்தில் ஏறிய 14 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.
குடியிருப்பு பகுதியில் மரத்தின் மேல் ஏறிய 14 அடி நீள ராஜ நாகத்தை தீயணைப்புதுறையினர் போராடி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் புளியரை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, மான், யானை உட்பட ஏராளமான விலங்குகள் வசித்து வருகிறது. அவ்வப்போது அடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இது தவிர அதி பயங்கரமாக கொடிய விஷத்தை கொண்ட ராஜநாகமும் இந்த பகுதியில் உள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள பகவதிபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே மாமரத்தில் பாம்பு ஏறியதை அப்பகுதியினர் பார்த்து தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மலைப்பாம்பு உள்ளதாக தெரிவித்ததால் செங்கோட்டை தீயணைப்புதுறை நிலைய அலுவலர்கள். செல்வன், மாரியப்பன் தலைமையில் சந்திரமோகன் பூபாலன் செந்தில் குமார் ராஜ் குமார் கார்த்திகேயன், இசக்கி, மாரிமுத்து, ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மா மரத்தின் மேல் மிக நீளமான சுமார் 14 அடி நீள ராஜ நாகம் இருந்ததை கண்டனர்.
உடனடியாக அங்கிருந்து குடியிருப்பு வாசிகளிடம் அறிவுறுத்தி அவர்களை அருகில் வரவேண்டாம் என எச்சரித்து பின்னர் மரத்தில் இருந்த கொடிய ராஜ நாகத்தை கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.