தமிழக கேரளா எல்லைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 70 பேர் கைது

கனிம வள கொள்ளையை தடுப்பதற்காக தமிழக கேரளா எல்லைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 70 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-02-13 07:52 GMT

கனிம வள கொள்ளையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழக கேரளா எல்லையில் சாலை மறியல் ஈடுபட முயன்ற 70க்கும் மேற்பட்டோர் போலீசாரால்  கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக பாரங்களுடன் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரவு நேரங்களில் மட்டுமே ஏராளமான லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று தமிழக கேரளா எல்லையான புளியரைப் பகுதியில் சாலை மறியல் நடைபெறும் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக ஏராளமான பதிவுகள் வைரல் ஆக பரவி வந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று புளியரை பகுதியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் கலைமணி தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன் தலைமையில் 70க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள்  தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து தமிழக அரசு கனிமவள கொள்ளைக்கு துணை போகின்றது. இதனால் இந்த மாவட்டத்தில் கனிம வளங்கள் அழிந்து வருகின்றது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை நாங்கள் இங்கு உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News