கடையநல்லூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 பேர் கைது
கடையநல்லூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பருத்தி விலை பகுதியில் சில நபர்கள் பயங்கர ஆயுதங்கள் தங்கி இருப்பதாக கடையநல்லூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் பொன்னரசு, அசோக் ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சுரேஷ் குமார் மற்றும் விஜயகுமார் மற்றும் காவலர்கள் பருத்தி விலைப் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது சரோஜா என்பவர் வீட்டை சோதனை மேற் கொண்ட போது வீட்டின் மாடியில் ஒரு வீடு மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த காவல்துறையினர் சட்ட வழிமுறைகளை பின்பற்றி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆறு நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
அவர்களைப் பிடித்து விசாரணை செய்த போது சேரன்மகாதேவி சங்கரன் திரடு தெற்கு தெருவை சார்ந்த முப்புடாதி என்ற ஆறு (27), மேட்டூர் அம்மன் கோவில் தெருவை சார்ந்த சுப்பையா என்பவரது மகன் சுரேஷ் கண்ணன் என்ற நெட்டூர் கண்ணன், மேலச்செவல் பகுதியை சார்ந்த பிச்சையா என்பவர் மகன் லட்சுமண காந்தன் என்ற கருப்பசாமி, ஊத்துமலை அம்மன் கோவில் தெருவை சார்ந்த பாண்டி என்பது மகன் மாரிமுத்து, அய்யனார் குளம் நடுத்தெருவை சார்ந்த உக்கிரமசிங்கம் என்பவர் மகன்களான சூர்யா மற்றும் சத்யா என்பது தெரியவந்தது.
மேலதிக விசாரணையில் முப்புடாதி என்பவர் மீது தென்காசி மற்றும் நெல்லை பிற மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, ஆயுத தடைச் சட்டம் என 21 வழக்குகள் உள்ளது. அதேபோல் சுரேஷ் கண்ணன் என்ற நெட்டூர் கண்ணன் மீது நெல்லை, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, ஆயுத தடைச் சட்டம் என 27 வழக்குகளும் உள்ளது. மேலும் லட்சுமண காந்தன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி என 15 வழக்குகளும், மாரிமுத்து என்பவருக்கு கொலை திருட்டு கஞ்சா என பத்து வழக்குகளும் உள்ளது. சூர்யா என்பதற்கு கொலை முயற்சி உட்பட இரண்டு வழக்குகள் உள்ளது. அதே போல் சத்யா என்பவருக்கு கொலை மற்றும் கொலை முயற்சி என ஒன்பது வழக்குகள் உள்ளது இவர்கள் அனைவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருந்த குற்றவாளிகள் இங்கு ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட வந்தார்களா, அல்லது வேறு எங்கேயும் சம்பவத்தில் ஈடுபட்டு இங்கு தலைமறைவாக உள்ளார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.