கடையநல்லூர் அருகே பைக் ரேஸ்சில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது
கடையநல்லூர் அருகே வடகரையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;
இருசக்கர வாகனத்தில் இளைஞர் சாகசத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸில் ஈடுபடுவோரைக் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் தென்காசி துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வடகரை, பண்பொழி திருமலை கோவில் சாலை, இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணித்து வந்தனர்.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். அதனை இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கொடூரமான முறையில் பதிவிட்டு வந்தவர்களை அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர்.
அப்பொழுது வடகரை கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் முகம்மது ஆசிக் (21). வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரின் மகன் ஷேக் ஒலி(25) ஆகியோர் மீது அச்சன்புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் புளியரை கொல்லம் மெயின் ரோட்டை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் கௌதம் கிருஷ்ணா (24) என்பவர் மீது இலத்தூர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் செங்கோட்டை காவல் நிலையத்தில் கலங்காத கண்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் பரத்குமார்(26) என்பவருக்கு மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூபாய் 11,000 அபராதம் விதிக்கப்பட்டு அவரின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதேபோல் வடகரையைச் சேர்ந்த 17 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் அவர்களின் பெற்றோர்களை வரவைத்து விதிமீறலுக்காக பெற்றோரின் முன்னிலையில் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பைக் ரேஸுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் கூறியதாவது:-
பெற்றோர்கள் 18 வயதிற்கு குறைவான தங்களுடைய பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுக்க கூடாது தொடர்ந்து பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். 18 வயசுக்கு குறைவானவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது குற்றம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.