கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகளும், குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மணிக்கூண்டு திடலில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதையடுத்து மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு, சட்டநகல் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.இப்போராட்டங்களின் போது காவல்துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனர்.
இப்போராட்டங்களின் போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.