ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி: கிருஷ்ணசாமி

Update: 2021-02-16 07:45 GMT

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே இனி கூட்டணி வைக்கப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தென்காசி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு என்ற நிகழ்ச்சி கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தில் நேற்றிரவு நடைபெற்றது. நிகழ்வுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, மாவட்ட செயலர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், இணைச் செயலர் செல்வராஜ், துணை செயலர் குமார், மாவட்ட இளைஞரணி செயலர் ராஜா, தொகுதி செயலர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலர் இன்பராஜ் வரவேற்றார்.

மாநாட்டில்,டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது, உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி நாம் நடத்திய பலக்கட்ட போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு தற்போது உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதாவை கொண்டுவந்துள்ளது. ஆனால் இது மட்டுமல்ல நமது கோரிக்கை. முழுமையாக தேவேந்திர குல வேளாளர் இனத்தைப் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் சில இடங்களுக்காக அவசரப்பட்டு கூட்டணி வைத்து தவறிழைத்து விட்டோம் .நமக்கு அமைந்த கூட்டணிகள் நேர்மையான கூட்டணி இல்லை. நம்முடைய வாக்குகளை அவர்கள் பெற்று வெற்றி பெற்றார்கள். அதே சமயம் நமக்கு ஆதரவாக அந்த கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கூட வாக்கு சேகரிக்க வரவில்லை.இனி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம். நமது தலைமையை விரும்பும் கட்சிகளுடன் இணைந்து தமிழக வளர்ச்சிக்கு பாதை அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.இந்த மாவட்ட மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News