செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல்
தென்காசி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல். 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புதுறை வீரர்கள் முதியவரை பத்திரமாக மீட்டனர்.;
தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியை அடுத்து நைனாகரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பாத்தியப்பட்ட அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களை கடந்த 4ஆண்டுகளுக்கு மேலாக அனுமதிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு அதற்கான கால் நாட்டும் விழா நாளை நடைபெற இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்த குலசேகரன் என்ற பாக்கியராஜ்(57) அப்பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் வட்டாச்சியர் பால முருகன் வரவழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இரு தரப்பு மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். 3மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் முதியவரை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டதால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.