கடையம் அருகே காட்டுயானைகள் அட்டகாசம்: மரங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை
கடையம் அருகே காட்டு யானை கூட்டங்கள் அட்டகாசம். 40 தென்னை மரம், 200 செவ்வாழை மரங்கள் சேதம். விவசாயிகள் வேதனை.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கு சிறுத்தைப் புலி, கரடி, யானை, மிளா, மான் போன்ற அரிய வகை வனவிலங்குகள் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும், தென்னை மற்றும் வாழைத் தோட்டங்களும் உள்ளது.
இந்நிலையில் கடையத்திற்கும் பழைய குற்றாலத்திற்கும் இடைப்பட்ட விளை நிலப் பகுதிகளில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் கூட்டம் விவசாயிகள் முருகன், லெட்சுமணன், பரமசிவன், பால்தேவன் ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், 200க்கும் மேற்பட்ட செவ்வாழைகளையும் துவம்சம் செய்து விட்டு சென்றது. இது குறித்து தகவல் அறிந்ததும் கடையம் வனத்துறையினர் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்கள் மற்றும் வாழைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டுயானைகளில் இருந்து விவசாயப் பொருட்களை பாதுகாக்கும் வகையில் வன அடிவாரப் பகுதியில் அகழி அல்லது தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.