சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூட கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் கல்குவாரியை மூட கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;
சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் கல்குவாரியை மூட கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஆண்டிபட்டி மற்றும் பூலாங்குளம் கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களும் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். பூலாங்குளம் கிராம எல்கைக்குட்பட்ட பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகின்றது. இதனால் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த கல்குவாரியில் அரசாங்கம் கொடுத்துள்ள அனுமதி அளவினை தாண்டி 320 அடி வரை தோண்டி கல் எடுத்து வருகின்றனர். மேலும் போர்வெல் மூலம் 100 அடி வரை குழிபறித்து அதில் சக்தி வாய்ந்த வெடி வைத்து கற்களை வெடிக்க செய்யும் போது எங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் குலுங்குகின்றன. மேலும் அனைத்து வீடுகளிலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளன.குவாரியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிகூட கட்டிடம் கட்டி சில ஆண்டுகளே ஆன போதிலும் கல்குவாரி வெடி தாக்கத்தின் காரணமாக ஏராளமான விரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. அதனால் கட்டிடம் இடியும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் வெடி வெடிக்கும்போது அதிகமான அளவில் கரும்புகை வெளி வருகிறது. இதனால் எங்கள் பகுதி மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் தனியார் கல்குவாரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள் தெரிவித்தனர்.