ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஊராட்சி அலுவலகத்தை கட்டளையூர் மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.;

Update: 2023-09-22 06:41 GMT

சீரான குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட ஐந்தாம் கட்டளை பஞ்சாயத்திற்கு உட்பட்டது கட்டளையூர் கிராமம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் பெரியசாமி என்பவரது மனைவி முப்புடாதி ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்டளையூர் பகுதி மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பஞ்சாயத்து தலைவரின் கணவர்பெரியசாமி கட்டளையூர் பகுதி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை தேவைகளும் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறி கட்டளையூர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மனுக்கள் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து அலுவலகத்தை கட்டளையூர் மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கடையம் காவல்துறை உதவி ஆய்வாளர் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் சுந்தர லெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் தண்ணீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News