ஆலங்குளம் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update: 2023-02-16 13:03 GMT

ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும் போது வெடி விபத்து நடைபெற்ற இடம்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ள சூழலில் விவசாய நிலங்களில் விவசாய பயிர்களுக்கு பாசனம் செய்வதற்காக போர்வெல் மற்றும் கிணறுகள் தோண்டி தண்ணீர் எடுத்து விவசாய பயிர்களுக்கு பயன்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் உள்ள பால் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதற்காக கிணறு வெட்டும் பணியானது நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று இந்த பணியின் போது குறிப்பிட்ட அடி ஆழம் கிணறு தோண்டிய பிறகு பாறைகள் இருந்துள்ளது. அந்த பாறைகளை வெடிவைத்து உடைப்பதற்காக காளத்திமடம் பகுதியை சேர்ந்த அரவிந்த், ஆசீர்சாம்சன், சக்திவேல், மாரி செல்வம், ராஜலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேர் பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக வெடியை பரிசோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது, எதிர்பாராத விதமாக வெடியானது வெடித்ததில் சம்பவ இடத்திலே காளத்தி மடம் பகுதியை சேர்ந்த 22 வயதான அரவிந்த் சம்பவ இடத்திலே பலியான சூழலில், ஆசிர் சாம்சன் என்பவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து ராஜலிங்கம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் சக்திவேல், மாரி செல்வம் உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்த சூழலில் இந்த பணியில் ஈடுபட்ட வேறு சில பணியாளர்களும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆலங்குளம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலத்தின் உரிமையாளரான பால் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆலங்குளம் பகுதியில் நடந்த இந்த வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News