ஆலங்குளத்தில் உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச்சென்றதால் பரபரப்பு
ஆலங்குளத்தில் உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
தென்காசியில் மணல் எடுத்து சென்ற டிராக்டர்.
தென்காசி அருகே ஆலங்குளத்தில் சட்ட விரோதமாக மணல் எடுத்து சென்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தொட்டியான் குளத்தில் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இலவசமாக விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்காக மூன்று அடி ஆழத்திற்கு மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள பொதுப்பணித்துறை மூலம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் விவசாயிகள் மண் எடுப்பதற்கு பதிலாக ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தொட்டியான் குளத்தில் மண் எடுத்து விற்பனையில் ஈடு பட்டனர். மூன்று அடி ஆழத்திற்கு மண் தோண்டி அள்ளுவதற்கு பதிலாக 10 முதல் 15 அடி வரை பத்துக்கு மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மண் அள்ளும் பணி நடைபெற்றுள்ளது.
மண்ணை தோண்டி டிராக்டர்களில் நிரப்பி ஆலங்குளத்தின் முக்கிய சாலைகள் வழியாக சாரை சாரையாக அணிவகுத்து சென்றனர். இரண்டு மூன்று ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களையும் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்களையும் பயன்படுத்தி டன் கணக்கில் குளத்தில் இருந்து மண்ணை அள்ளி வயல்வெளிகளுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக பொதுமக்களுக்கு குடியிருப்பு பகுதிகளுக்காக யூனிட் ஒன்றுக்கு 600 முதல் வியாபாரம் செய்து வந்தது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குளத்தில் சட்டத்திற்கு புறம்பாக மண் அள்ளப்படுவதை அறிந்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற பொழுது செய்தியாளர்களை கண்டதும் டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலங்குளத்தில் தொட்டியான் குளத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மண் அள்ளிய கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆலங்குளம் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.